மூங்கில்துறைப்பட்டில் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதல்; 4-ம் வகுப்பு மாணவன் பலி


மூங்கில்துறைப்பட்டில் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதல்; 4-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 12 March 2018 3:15 AM IST (Updated: 12 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டில் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் 4-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மூங்கில்துறைப்பட்டு,

பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள பெரியகொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் சிவா என்கிற சிவசங்கரன்(வயது 9). இவன் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், இவன் மூங்கில்துறைப்பட்டு அருகே உலகளாப்பாடியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான்.

பின்னர் சிவா மற்றும் இவனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி தங்கவள்ளி(45), மகன் தசரதன்(20), திருவண்ணாமலை மாவட்டம் தொண்டாமனூரை சேர்ந்த குணசேகரன் மகன் விஷ்ணு(17) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் தொண்டாமனூருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை தசரதன் ஓட்டினார்.

மூங்கில்துறைப்பட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, திருவண்ணாமலையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த மினிலாரி ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். தசரதன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story