ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம்: உங்கள் அன்புக்கு கைமாறு செய்யும் கடமை எனக்கு உள்ளது - கமல்ஹாசன்


ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம்: உங்கள் அன்புக்கு கைமாறு செய்யும் கடமை எனக்கு உள்ளது - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 12 March 2018 4:30 AM IST (Updated: 12 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்கள் மத்தியில் பேசும்போது, ‘உங்கள் அன்புக்கு கைமாறு செய்யும் கடமை எனக்கு உள்ளது’ என்றார்.

ஈரோடு,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை நமதே என்ற கோஷத்தை முன்வைத்து உறுப்பினர் சேர்க்கை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர்,நேற்று முன்தினம் அவினாசி வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை வந்தார். 2-வது நாள் சுற்றுப்பயணம் நேற்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்ச்சியுடன் நடந்தது. அவர் ஏற்கனவே அறிவித்தபடி கட்சி நிர்வாகி ஒருவரை கொடியை ஏற்ற வைத்தார். அப்போது காரில் இருந்து இறங்கி கொடி கம்பத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். கொடி ஏற்றும்போது, நிர்வாகி தடுமாற கயிற்றை பிடித்து உதவி செய்தார். பின்னர் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர், கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் முடிக்கவும், நீர்நிலைகள் தூர்வாருவது தொடர்பான பணிகளை அரசிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றவும் ஆவன செய்வதாக கூறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் லக்காபுரம் வந்தார். அப்போது பள்ளிக்கூட மாணவிகள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் காரை நிறுத்தி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திடீரென்று கமல்ஹாசனை பார்த்த மாணவிகள் உற்சாகமாக கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதுபோல் லக்காபுரம் பகுதியில் கூடி இருந்த மக்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டார்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கமல்ஹாசன் பேசுவதற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அவர் வந்ததும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கு கூடி இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களை பார்த்து அவர் கைகளை அசைத்தார். மேலும் அவரது கட்சி இலச்சினையான இணைந்த கைகளை குறிக்கும் வகையில் அவரது 2 கைகளையும் பிணைத்து அவர் ரசிகர்களிடம் காட்டினார்.

சித்தோடு, கவுந்தப்பாடி பகுதிகளில் காரில் இருந்தபடியே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். கோபி பெரியார் திடலில் பேசுவதற்கு மேடை வசதி செய்யப்பட்டு இருந்தது. சத்தியமங்கலம், டி.ஜி.புதூர், டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூர், பவானி பகுதிகளில் காரில் நின்றபடியே பேசினார். இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று அவரை உற்சாக கோஷம் எழுப்பி வரவேற்றனர். ரோட்டில் மக்கள் நெரிசலின் இடையே கார் மெதுவாக ஊர்ந்து வர, காரின் மேல் பகுதி வழியாக கமல்ஹாசன் பொதுமக்களை புன்னகையுடன் கைகளை அசைத்தும், பறக்கும் முத்தங்கள் கொடுத்தும் உற்சாகப்படுத்தினார்.

பவானி பாலத்தின் அருகே காரை நிறுத்திய அவர் பவானி ஆற்றுப்படிகள் வழியாக இறங்கி சென்று ஆகாயத்தாமரை படர்ந்து கிடந்த பவானி ஆற்றை பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

இந்த பொதுமக்கள் சந்திப்பு பயணத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என்ற முறையில் கட்சியின் முதல் கொடியை மதுரையில் நான் ஏற்றி வைத்தேன். இனிமேல் இந்த கொடியை ஏற்றுவதும், பாதுகாப்பதும், அதற்கு பெருமை சேர்ப்பதும் தொண்டர்களாகிய நீங்கள்தான். எனவேதான் அனைத்து கொடி ஏற்று விழாக்களிலும் அந்த பகுதியின் தொண்டர்களை கொடி ஏற்ற வைக்கிறேன். இனி கட்சியையும் கொடியையும் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இந்த வெயில் நேரத்திலும் நீங்கள் எனக்காக வெகுநேரம் காத்து இருக்கிறீர்கள். உங்கள் இந்த அன்புக்கு கைமாறு செய்யும் கடமை எனக்கு உள்ளது. ஆனால் என்ன கைமாறு செய்யப்போகிறேன். நான் எனது கடமையை செய்வேன்.

இளைஞர்கள் மதுவின் பாதைக்கு செல்வதை தடுக்க வேண்டும். ஒரே நாளில் மதுவிலக்கு என்பது சாத்தியமல்ல. அப்படி நிறுத்தினால் வேறு பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்கள். எனவே மாற்று பாதை தேவை. இளைஞர்களுக்கு தறி குறித்த பார்வை வேண்டும். அழியும் நிலையில் உள்ள தறித்தொழிலை மீட்க வேண்டும். நீங்கள் தறித்தொழிலை ஆதரித்தால், கைத்தறி, விசைத்தறி அனைத்தும் உயரும். விவசாயத்திலும் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

மாற்றம் வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நானும் விரும்புகிறேன். மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் ஓட்டுக்கு எவராலும் விலை கொடுக்க முடியாது. அது விலை மதிக்க முடியாதது. விலைக்கு விற்கக்கூடாதது. நீங்கள் விலை பேசிவிடக்கூடாது என்ற வாக்குறுதியை எனக்கு தரவேண்டும். அப்படி உங்கள் வாக்குகளை விற்பனை செய்யப்படாமல் நேர்மையாக வாக்களித்தால் நாளை நமதே. அனைவரும் சேர்ந்து தேர் இழுத்தால் நாளை நமதே.

உங்கள் குறைகளை மக்கள் நீதி மய்யம் கேட்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண செய்யும். இங்கு கூடி இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு நன்றி, உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். 

Next Story