பவானி கோவில் திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைத்தவர்களிடம் பணம் வசூலித்து மோசடி
பவானியில் பிரசித்திபெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது.
பவானி,
பவானியில் பிரசித்திபெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மாசி திருவிழாவையொட்டி பவானி பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட இடங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட உயரமான சாமி உருவங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அலங்காரத்தை பார்க்க உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நேற்று வந்திருந்தனர். இதனால் பவானி பகுதியில் ரோட்டோரத்தில் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து இருந்தனர்.
இந்தநிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த ஒருசிலர், நாங்கள் கோவில் பகுதியில் கடைகள் அமைக்க ஏலம் எடுத்து உள்ளோம். அதனால் இங்கு கடைகள் அமைக்க பணம் தரவேண்டும் என்று கடை வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தற்காலிக கடைக்காரர்கள் இதுகுறித்து பவானி நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் ஆணையாளர் (பொறுப்பு) மகேஷ்வரி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.