திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதலான வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு


திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதலான வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 March 2018 3:45 AM IST (Updated: 12 March 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், அந்த வாகனங்களில் இருந்து உதிரி பாகங்களும் திருடப்படுகிறது.

அம்பத்தூர்.

சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் விபத்துகள், குற்ற வழக்குகள், போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை போலீஸ் நிலையத்தின் முன்புறம், அருகில் உள்ள பள்ளி சாலை மற்றும் மாநகராட்சி அண்ணா திருமண மண்டபத்தையொட்டி உள்ள நடைபாதைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் உள்ள நடைபாதைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது.

வழக்குகளில் சிக்கி பறிமுதலாகி 6 வருடங்களுக்கும் மேலான வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமலும், நீதிமன்ற உத்தரவு பெற்று ஏலம் விடாமலும் வீணாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்களில் இருந்து பேட்டரிகள், முகப்பு விளக்குகள், டயர்கள், என்ஜின் உள்ளிட்ட உதிரிபாகங்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விடுகின்றனர். இதனால் அந்த வாகனங்கள் எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.

மர்மநபர்கள் இந்த வாகனங்களில் இருந்து உதிரிப்பாகங்களை திருடி பாடி, திருவல்லீஸ்வரர் நகர், திருமங்கலம் நேரு நகர் பகுதிகளில் உள்ள மெக்கானிக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்றுவிடுவதாக கூறப்படுகிறது. இது குறித்த புகார்கள் மீதும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மர்மநபர்கள், எந்த பயமும் இன்றி தொடர்ந்து வாகனங்களில் இருந்து உதிரிபாகங்களை திருடி வருகின்றனர்.

இதனை தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பறிமுதல் செய்து குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அங்கிருந்து அகற்றி, நடைபாதை மற்றும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story