சென்னை புளியந்தோப்பில் திருநங்கை மீது தாக்குதல்; தாய் - 2 மகன்கள் கைது


சென்னை புளியந்தோப்பில் திருநங்கை மீது தாக்குதல்; தாய் - 2 மகன்கள் கைது
x
தினத்தந்தி 12 March 2018 4:30 AM IST (Updated: 12 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புளியந்தோப்பில் திருநங்கையை தாக்கிய தாய் மற்றும் அவருடைய 2 மகன்கள் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரதி (வயது 40). திருநங்கையான இவர், தனது தங்கை லட்சுமி, அவருடைய கணவர் சங்கர், அவர்களது மகன் சந்தானபாரதி, மகள் சரிதா (19) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

சரிதா, பெற்றோருடன் இருந்தாலும், சிறுவயது முதலே அவரை ரதிதான் செல்லமாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. சரிதாவும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மோகன்-கலைசெல்வி (40) தம்பதியின் மகன் லோகு (22) என்பவரும் காதலித்து வந்தனர்.

கடந்த மாதம் 25-ந் தேதி சரிதா, லோகு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அடையாறில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையில் சரிதா மாயமானதாக அவரது பெற்றோர் மற்றும் ரதி புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தனர்.

இதுபற்றி அறிந்ததும் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகள், மறுநாளே புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். போலீசாரும், இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

முதலில் இதற்கு மறுத்தாலும் பின்னர் ஏற்றுக்கொண்ட ரதி, பாசமாக வளர்த்த பெண் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது மனதளவில் கஷ்டமாக உள்ளது. சிறிதுகாலம் வேறு எங்காவது சென்று வாழும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட சரிதா-லோகு இருவரும் போலீஸ் நிலையத்தில் எழுதிக்கொடுத்தனர்.

ஆனால் அதன்பிறகு அவர்கள் ரதி வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்தனர். லோகு மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரதியை அடிக்கடி கேலி, கிண்டல் செய்ததுடன், அவருடன் தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரதி, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது லோகு, அவருடைய தம்பி பாலாஜி (20), தாயார் கலைசெல்வி ஆகியோர் ரதியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ரதி அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லோகு, பாலாஜி, கலைசெல்வி ஆகிய 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

Next Story