விருதுநகர் பாதாள சாக்கடை திட்டம்: 12 ஆயிரம் வீடுகளுக்கான இணைப்புகள் 3 மாதங்களுக்குள் வழங்குவது சாத்தியமா? நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


விருதுநகர் பாதாள சாக்கடை திட்டம்: 12 ஆயிரம் வீடுகளுக்கான இணைப்புகள் 3 மாதங்களுக்குள் வழங்குவது சாத்தியமா? நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 March 2018 1:38 AM IST (Updated: 12 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் பாதாள சாக்கடை திட்டம்: 12 ஆயிரம் வீடுகளுக்கான இணைப்புகள் 3 மாதங்களுக்குள் வழங்குவது சாத்தியமா? என நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணியை அடுத்த 3 மாதங்களுக்குள் முழுமையாக முடிப்பதாக குடிநீர் வடிகால் வாரியமும், நகராட்சி நிர்வாகமும் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவிடம் உறுதி அளித்துள்ள நிலையில் 12 ஆயிரம் வீடுகளுக்கு 3 மாதங்களுக்குள் இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைதிட்டப்பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் பணி முடிக்கப்பட்டு திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதி அளிக்கப்பட்டது. திட்டப்பணியை குடிநீர் வடிகால் வாரியமும், நிதி செலவை விருதுநகர் நகராட்சி நிர்வாகமும் மேற்கொண்ட நிலையில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.26 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டப்பணி தொடங்கப்பட்டது.

திட்டப்பணி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பணியை மேற்கொண்டுள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கு போதுமான அக்கறை காட்டவில்லை. குடிநீர் வடிகால் வாரியம் நகராட்சி நிர்வாகத்தையும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியத்தையும் ஒருவருக்கொருவர் புகார் கூறுவதிலேயே 10 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இரு துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

இறுதிக் கட்ட பணிகளை செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.3¼ கோடி மதிப்பீட்டில் மறுடெண்டர் விடப்பட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டப்பணியில் பல்வேறு பகுதிகள் விடுபட்டுள்ளது என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.

எனினும் திட்டப்பணி நடந்துள்ள பகுதிகளில் பணிகளை முழுமையாக முடித்து 3 மாதத்துக்குள் முடித்து திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக கடந்த மாதம் விருதுநகர் மாவட்டத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்த சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவிடம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், விருதுநகர் நகராட்சி அதிகாரிகளும் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் தற்போது 12 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளை கொடுப்பதற்கு ரூ.6¼ கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரி உள்ளது. ஏப்ரல் மாதம் 18-ந்தேதி டெண்டர் முடிவு செய்யப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. டெண்டர் முடிவு செய்யப்பட்ட பின்னர் 12 ஆயிரம் இணைப்புகள் எவ்வளவு காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்பது குறித்து டெண்டர் அறிவிப்பில் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவுக்கு உறுதி அளித்தபடி 3 மாதங்களுக்குள் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்றால் 12 ஆயிரம் இணைப்புகளும் மே மாதம் இறுதிக்குள் கொடுத்து முடிக்கப்பட வேண்டும். இது சாத்தியமா? என்பது தெரியவில்லை.

நகரசபை கமிஷனர் சந்திரசேகரிடம் இது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

இதுவரை பாதாள சாக்கடை திட்டப்பணியில் தாமதம் ஏற்பட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனாலும் வீடுகளுக்கான இணைப்பு வழங்குவதற்கு அடுத்த மாதம் டெண்டர் முடிவு செய்யப்பட்டுவிட்டால் நகராட்சி நிர்வாகமே இணைப்பு வழங்கும் பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முழுமையாக முடிக்க நகராட்சி நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாதாள சாக்கடை திட்டப்பணியை முடிப்பது தொடர்பாக இம்மாதிரியான காலக்கெடு உறுதியினை பல முறை அதிகாரிகள் தெரிவித்தும் பலன் ஏதும் இல்லாத நிலையில் இறுதி கட்டத்திலாவது பணியை அடுத்த 3 மாதங்களுக்கு முடித்து திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், இதனை முறையாக கண்காணித்து இறுதிக்கட்ட பணியில் முடக்கம் ஏதும் ஏற்படாதவாறு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். 

Next Story