சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு


சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 12 March 2018 4:17 AM IST (Updated: 12 March 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

மாணவன் கொலை வழக்கு விசாரணையில் அலட்சியமாக செயல்பட்ட சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் விஜய் சிங். இவரது மகன் சந்தோஷ். இவர் நவிமும்பை, கார்கர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். சந்தோசுடன் அவரது நண்பர்களான விகாஸ் குமார், ஜித்தேந்திர குமார், தீரஜ் குமார் ஆகியோரும் தங்கி இருந்தனர். 4-வது மாடியில் தங்கியிருந்த சந்தோஷ் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி அங்குள்ள பால்கனியில் பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். சந்தோஷ் குடிபோதையில் வீட்டின் குளியல் அறையில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதை எதிர்த்து சந்தோசின் தந்தை விஜய் சிங், மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதன்படி ஐகோர்ட்டு, மாணவனின் மர்ம மரணம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. இதில் விசாரணை துரிதமாக செயல்படாததால் விஜய் சிங் இந்த சம்பவம் குறித்து மாநில உரிமை ஆணையத்தில் முறையிட்டார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு சி.பி.ஐ., பன்வெல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் கோர்ட்டு சி.பி.ஐ.யின் மனுவை நிராகரித்தது.

இந்தநிலையில் வழக்கு விசாரணையை முறையாக மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட சி.பி.ஐ.க்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ.15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

Next Story