திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோரை சேர்த்து வைக்கக்கோரி பாட்டியுடன் தீக்குளிக்க முயன்ற குழந்தைகள்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோரை சேர்த்து வைக்கக்கோரி பாட்டியுடன் தீக்குளிக்க முயன்ற குழந்தைகள்
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோரை சேர்த்து வைக்கக்கோரி பாட்டியுடன் தீக்குளிக்க முயன்ற குழந்தைகளால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சிங்காரக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 38). காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி பவானி (32). இவர்களுக்கு ஹேமா (14), நந்தினி (9), யோகாஸ்ரீ (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பவானி தனது கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, பவானியை அவருடைய பெற்றோர் வெளியூருக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இதன்காரணமாக 3 குழந்தைகளையும் முருகன் மற்றும் அவருடைய தாயார் கோவிந்தம்மாள் (65) ஆகியோர் வளர்த்து வந்தனர். இந்தநிலையில் 5 ஆண்டுகள் கழித்து பவானி சிங்காரக்கோட்டைக்கு வந்தார். அவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். பவானி ஊருக்கு வந்த தகவல் அவருடைய குழந்தைகளுக்கு தெரியவந்தது.

நேற்று காலை அவர்கள் பள்ளிக்கு கிளம்பி சென்றபோது, பவானி அந்த வழியாக மில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். தாயை பார்த்த குழந்தைகள் பவானியை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். அப்போது பவானியின் உறவினர்கள் குழந்தைகளை தாக்கி விரட்டினர். இந்த சம்பவம் குறித்து 3 குழந்தைகளும் தனது பாட்டி கோவிந்தம்மாளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவிந்தம்மாள் 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு புகார் கொடுப்பதற்காக நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தனர். கலெக்டரின் கார் நிறுத்துமிடம் அருகே வந்தபோது 4 பேரும் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை பார்த்த போலீசார் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஹேமா கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக எங்களது தாயை அவருடைய பெற்றோர் மறைத்து வைத்திருந்தனர். இதனால் அவரை பார்க்க முடியாமல் தவித்தோம். இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) அவரை பார்த்தபோது வீட்டுக்கு வருமாறு அழைத்தோம். அப்போது, நான் உங்களுக்கு தாய் இல்லை என்று அவர் கூறிவிட்டார். மேலும், சிலர் எங்களை தாக்கினர். எங்களை தாயுடன் சேர்த்து வைக்க வேண்டும். எனது பெற்றோருக்கு அறிவுரை கூறி அவர்களையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story