பழனி அருகே கந்துவட்டி கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்: கருவில் இருந்த குழந்தை சாவு


பழனி அருகே கந்துவட்டி கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்: கருவில் இருந்த குழந்தை சாவு
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே கந்து வட்டி கேட்டு கர்ப்பிணி மீது நடந்த தாக்குதலில் கருவில் இருந்த குழந்தை இறந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பழனி,

பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). இவருடைய மனைவி ஈஸ்வரி. ரஞ்சித்குமார், பாலசமுத்திரத்தை சேர்ந்த சரவணன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இதனால் சரவணனின் மாமியார் ஜோதிமணியின் வீட்டில் வாடகைக்கு ரஞ்சித்குமார் குடியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சரவணனிடம், ரஞ்சித்குமார் ரூ.20 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். அதில் ரூ.4 ஆயிரத்தை வட்டி தொகையாக எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித்குமார் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஈஸ்வரி நிறைமாத கர்ப்பிணியானதால், ரஞ்சித்குமாரால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை.

இதனால் ரஞ்சித்குமாரை சந்தித்த சரவணன் வேலைக்கு வராதது குறித்து கேட்டுள்ளார். மேலும் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று மிரட்டிள்ளார். இதையடுத்து அவருடைய மாமியார் ஜோதிமணி பணத்தை கொடுத்து விட்டு வீட்டை காலிசெய்யும்படி கூறி உள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்குமார் தனது மனைவி ஈஸ்வரியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் திரும்பி வந்த போது வீடு பூட்டி கிடந்தது. இதுபற்றி சரவணனிடம் கேட்ட போது பணத்தை கொடுத்தால் வீட்டு சாவியை கொடுப்பதாக கூறியதோடு, சரவணனை தாக்க முயன்றுள்ளார். அதை தடுக்க முயன்ற ஈஸ்வரியை சுவற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணியான ஈஸ்வரி வலியால் துடித்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அங்கு கருவில் இருந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். மேலும் ஈஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து சரவணன், ஜோதிமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story