மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது குடிநீர் கேட்டு கோ‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் கிராமத்தை சேர்ந்த பெண்கள், குடிநீர் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் கேட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் பல்வேறு அமைப்பினரும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உள்ள மேலப்பாளையம் செல்லும் சாலையில் நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்திற்கு பணியாளர்கள் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பர்னபாஸ், வேல்கனி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் குடிக்க குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு குடம் தண்ணீர் ரூ.5–க்கு வாங்கி வருகிறோம். எனவே எங்களுக்கு மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர், நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ராமராஜ்ஜிய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி முபாரக், த.மு.மு.க. நிர்வாகிகள் உஸ்மான்கான், ரசூல்மைதீன், ஜாபர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், ஜமால், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், ஆதித்தமிழர் கட்சி குட்டிப்பாய், கதிரவன், தமிழ்புலிகள் தமிழ்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், விசுவஇந்து பரி‌ஷத் ஏற்பாட்டில் ராமராஜ்ஜிய யாத்திரை கடந்த மாதம் (பிப்ரவரி) 13–ந் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கி நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறது. வருகிற 20–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கேரள மாநிலம் புனலூர் வழியாக தமிழகத்தில் செங்கோட்டைக்கு வருகிறது. பின்னர் விருதுநகர் வழியாக நெல்லைக்கு வந்து கன்னியாகுமரி சென்று திருவனந்தபுரம் செல்கிறது. இந்த யாத்திரையால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே இந்த ராமராஜ்ஜிய யாத்திரையை நெல்லை மாவட்டத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட கிளப் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த இடத்தில் விளையாட்டு மையமும், பூங்காவும் அமைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.

தமிழர் விடுதலை களம் அமைப்பினர் மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை கிராமத்தில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையெனில் ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறி உள்ளனர்.

சுத்தமல்லி முஸ்லிம்களுக்கு மையவாடிக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று சுத்தமல்லி அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் மனு கொடுத்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாடைக்கட்டி கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தற்போது பஞ்சாயத்து அலுவலகம் உள்ள வென்றிலிங்கபுரத்தில் பஞ்சாயத்துக்கான கூடுதல் கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

கிராம பஞ்சாயத்தில் பணியாற்றக்கூடிய துப்புரவு பணியாளர்கள், பம்பு ஆபரேட்டர்கள், தங்களுக்கு அரசு உத்தரவுபடி உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கூறி சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். நெல்லை சுத்தமல்லி நரசிங்கநல்லூர் பகுதி திருநங்கைகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் அங்குள்ள தனி அறையில் அமரவைக்கப்பட்டனர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்று அவர்களிடம் மனுக்களை வாங்கினார். நேற்று காலையில் நெல்லை மாநகர பகுதியில் சாரல் மழை தூறியது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல் மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் வரிசையில் நின்று மனு கொடுத்து சென்றனர். போலீசாரும் மழை என்று பார்க்காமல் அனைவரையும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.


Next Story