சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது: அய்யாக்கண்ணு பேட்டி


சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது: அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 13 March 2018 4:15 AM IST (Updated: 13 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீர் மட்டம் உயரும் வரை சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு அடைந்த பகுதிகளில் விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இழப்பீட்டு தொகைக்கான பிரீமியம் கட்டிய அனைவருக்கும் வழங்கப்படவில்லை. நெற்பயிர் தவிர இதர பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இது பற்றி பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாதநிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள விதைகளை இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. இதற்கு தடைவிதிக்க வேண்டும். மக்காச்சோளத்துக்கு உரியவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சுழி பகுதியில் குண்டாற்றில் தடுப்பணை கட்டி மழைக்கால வெள்ள நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வருசநாட்டிற்கு மலைப்பாதை அமைக்க வேண்டும். விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் 2,000 அடி ஆழத்தில் இருந்து நிலத்தடி நீரை எடுத்து சூரிய மின் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும் வரை நிலத்தடி நீர்மட்டம் உயரும் வரை சூரியஒளி மின் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான துண்டுபிரசுரங்களை வினியோகித்துவிட்டு சென்னையில் முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளோம். மத்திய அரசு வருகிற 29-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு தூக்குபோடும் போராட்டம் நடத்துவோம். கர்நாடகாவில் தேர்தல் நடைபெறஉள்ளதால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

தமிழக அரசும், பா.ஜனதா அரசுக்கு பயந்து அழுத்தம் கொடுக்க தயங்குகிறது. தமிழகத்திற்கு தேவையான காவிரி நீர் கிடைத்தால் மத்திய அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்படும் என்பதற்காகவே இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது. இவ்வாறு கூறினார். இதனை தொடர்ந்து கலெக்டர் சிவஞானத்தை சந்தித்து விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கோரி மனு கொடுத்தார். 

Next Story