சின்னமுட்டம் துறைமுகத்தை கிழக்கு கடற்கரை பகுதியுடன் மீண்டும் இணைக்க வேண்டும்


சின்னமுட்டம் துறைமுகத்தை கிழக்கு கடற்கரை பகுதியுடன் மீண்டும் இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 March 2018 4:15 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

சின்னமுட்டம் துறைமுகத்தை கிழக்கு கடற்கரை பகுதியுடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

அந்த மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா பேராலய பங்குத்தந்தை ரொமால்டு மற்றும் மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் நேற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவைச் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகம் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு கடற்கரை தடைகாலத்துடன் சின்னமுட்டம் துறைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை நீக்க வேண்டும். எனவே சின்னமுட்டம் துறைமுகத்தை மீண்டும் கிழக்கு கடற்கரை பகுதியுடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:–

மணக்காவிளை பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் சட்ட விரோதமாக பல பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் 19–12–2014 வரை ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 224–ம், 19–12–2014 முதல் இதுவரை ரூ..20 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட பணிந்து வேண்டுகிறேன். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டுறவு வங்கி முறைகேட்டினை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அந்தோணிமுத்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்குகிறது. அனுமதியுடன் பணிசெய்திடும் கல்குவாரிகளைவிட அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள்தான் அதிகம். நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கனிமவளத்துறையும், வருவாய்த்துறையும் மாவட்ட நிர்வாகமும் வாய்மூடி மவுனம் காப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் பெயர்த்து எடுக்கப்படுகிறது. கல்குவாரிக்கு அனுமதி பெற்றவர்கள் கூட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. 10 அடி ஆழத்துக்கு மேல் கற்கள் எடுக்கக்கூடாது என விதியுள்ளது. சிறு பாறைகளை, குன்றுகளை தகர்த்தவர்கள் பொருளாதார பலம் பெற்றும், அரசியல் பலம் பெற்றும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையை தகர்த்து வருகின்றனர். இதனால் மழை வளம் குறைகிறது. இயற்கை எழில் கொஞ்சும் காடுகளின் பரப்புகள் குறைகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இனிமேலும் மவுனம் காக்காமல் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு மலைவளத்தை பாதுகாத்து, மழைவளத்தை உருவாக்கி இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாஞ்சில் ரத்த தான அறக்கட்டளை சார்பில் விஷ்ணுகுமார் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், “ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்ய இங்கு இயங்கி வரும் ரத்த வங்கி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாவட்டத்தின் முதன்மை அரசு மருத்துவமனையான இம்மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கியில் பிற்பகல் 2 மணிக்கு மேல் ரத்ததானம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் அவசர கால நேரத்தில் ரத்த தானம் செய்ய முடியவில்லை. எனவே 24 மணி நேரமும் ரத்த வங்கி செயல்பட வேண்டும் என உத்தரவு அளிக்க வேண்டும்“.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மெதுகும்மல் அருகே உள்ள பருத்திவிளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் உள்பட சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் மும்பையில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகக்கூறி என்னிடமும் மேலும் 7 பேரிடமும் ரூ.13 லட்சம் பெற்றுக்கொண்டு எங்களை வேலைவாய்ப்பு விசாவில் 5 பேரை துபாய்க்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு வேலை தராமல் அஜ்மல் பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைத்தார்கள். இதைகேட்டதற்கு நாங்கள் மிரட்டப்பட்டோம். பின்னர் எங்கள் நண்பர் சதீஷ் மூலம் சொந்த ஊர் தப்பி வந்தோம். எனவே விசா மோசடி செய்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் இவர்கள் மனு கொடுத்தனர்.


Next Story