சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரில் நாற்று நடும் போராட்டம்


சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரில் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 13 March 2018 4:15 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரில் நாற்று நடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு, ரைட்டர்ஸ் சாலையில் அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக செல்லக் கூடிய மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ரைட்டர்ஸ் சாலையில் மீண்டும் கழிவுநீர் தேங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் கழிவுநீரை அகற்ற நகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த பெண்கள் தேங்கி நின்ற கழிவுநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஊழியர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இந்தப்பகுதியில் ரைட்டர்ஸ் சாலை, டுபாஷ் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதிகளில் மாடுகள் வளர்த்து பால் விற்கும் தொழில் செய்பவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்கள் மாடுகளின் சாணம் அனைத்தையும் மழைநீர் கால்வாயில் கொட்டி விடுவதால் அதில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு மிகுந்த துர்நாற்றமும், தொற்றுநோய் எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் கழிவுநீர் தேங்குவதை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நகராட்சி ஊழியர்கள் வந்து, கழிவுநீரை அகற்றினார்கள். ஆனால் தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story