காட்டுப்பகுதியில், அ.தி.மு.க. பிரமுகர் மகன் பிணமாக கிடந்தார்: கொலையா? என போலீஸ் விசாரணை


காட்டுப்பகுதியில், அ.தி.மு.க. பிரமுகர் மகன் பிணமாக கிடந்தார்: கொலையா? என போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தவர், அ.தி.மு.க. பிரமுகரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. செம்மரக் கடத்தல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் காலனியைச் சேர்ந்தவர் தனசாமி. இவர், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராகவும், கர்லம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவருடைய மகன் தனசேகர்(வயது 31). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த மெடில்டா(27) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோத்தீஷ்(5) என்ற மகனும், பூஜிதா(7), ரிசித்தா(3) என்ற மகள்களும் உள்ளனர்.

கடந்த 1-ந்தேதி இரவு 9 மணியளவில் தனசாமியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை அவருடைய மகன் தனசேகர் எடுத்து பேசியபடியே வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் தனசேகரை காணவில்லை. இதுபற்றி அவருடைய மனைவி மெடில்டா, பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து மாயமான தனசேகரை தேடிவந்தார்.

இந்தநிலையில் பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடை த்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் பிணமாக கிடப்பது, மாயமான தனசேகர் என்பது தெரிந்தது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் நேரில் வந்து பிணத்தை பார்த்துவிட்டு அது தனசேகர்தான் என அடையாளம் காட்டினர்.

இதையடுத்து போலீசார், தனசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், திருத்தணியை சேர்ந்த செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவருக்கும், தனசேகருக்கும் இடையே செம்மரக்கடத்தல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருப்பதாக தெரியவந்தது. எனவே அதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் தனசேகர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story