உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்


உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமதலி ஜின்னா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

நேற்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால், இவர்கள் மனு கொடுக்க வந்தபோது கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ஒரு அதிகாரி வந்து அந்த மனுவை பெற்றுக்கொண்டார். அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், 11.10.2017-ந் தேதி முதல் நகராட்சி ஒப்பந்தத்தின்படி, சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை மற்றும் நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

10.5.2000-ந்தேதிக்கு பிறகு வேலையில் சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட மாத ஊதியம் மற்றும் நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. 

Next Story