சேலம் பெண் என்ஜினீயர் காட்டுத்தீயில் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்


சேலம் பெண் என்ஜினீயர் காட்டுத்தீயில் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தில் படுகாயம் அடைந்த சேலம் பெண் என்ஜினீயர் காட்டுத்தீயில் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி உத்தரம்மாள். இவர்களுக்கு தேவி (28) என்ற மகளும், கார்த்தி (25) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் என்ஜினீயரிங் படித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தேவி, சென்னை போளூரில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கார்த்தி நெல்லையில் வேலை பார்த்து வருகிறார்.

சென்னை டிரக்கிங் கிளப் சார்பில், மகளிர் தினத்தையொட்டி குரங்கணி வனப்பகுதியில் உள்ள கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மலையேறும் பயிற்சி கிளப்பில் தேவி உறுப்பினராக உள்ளார். இதனால் அவரும் மலையேற்ற பயிற்சிக்கு சென்றுள்ளார். தனது குழுவினருடன், தேவி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது, திடீரென்று காட்டுத்தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தீயின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய அவர், படுகாயம் அடைந்தார்.

இதனிடையே அவரை மீட்ட மீட்பு குழுவினர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் தேவி படுகாயம் அடைந்த சம்பவத்தை கேள்விபட்டதும், அவரது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தேவியை பார்க்க அவரது பெற்றோர், உறவினர்கள் சிலர் மதுரைக்கு சென்றனர். அவரது வீட்டில் தேவியின் பாட்டி (உத்தரம்மாளின் தாயார்) பழனியம்மாள் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் உள்ளனர். இது குறித்து பழனியம்மாள், உறவினர்கள் கூறியதாவது:-

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக தேவி, சொந்த ஊருக்கு வந்திருந்தார். எங்களுடன் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடினார். பின்னர் சென்னை திரும்பி விட்டார். தற்போது மலையேற்ற பயிற்சி சென்ற போது தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவத்தை கேள்விபட்டதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவர் நல்ல முறையில் குணமாகி, உயிரோடு திரும்பி வர கடவுளை வேண்டி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story