தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்த கார் கம்பிகள் மீது மோதி விபத்து: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்த கார் கம்பிகள் மீது மோதி விபத்து: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்த கார் தடுப்பு கம்பிகள் மீது மோதிய விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

கரூர்,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சேலத்தில் இருந்து கரூர் வழியாக தேனிக்கு காரில் சென்றார். இதையொட்டி கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூர் அருகே புத்தாம்பூர் பிரிவில் மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தர்மலிங்கம்(வயது 45) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் போடி அருகே குரங்கணி மலைப்பகுதி தீ விபத்தில் மீட்பு பணியில் சென்னையை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். பணி முடிந்த பின் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு காரில் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் புத்தாம்பூர் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கார் வந்தபோது சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தடுப்பு கம்பிகள் தூக்கி வீசப்பட்டதில் பாதுகாப்பு பணியில் இருந்த தர்மலிங்கத்தின் கால்கள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்த காரை ஓட்டி வந்த திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பிரசாத்(27) என்பவரை பிடித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். 

Next Story