பதிவு செய்த அனைத்து பெண்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் முதல்-அமைச்சர் பேச்சு


பதிவு செய்த அனைத்து பெண்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 13 March 2018 4:45 AM IST (Updated: 13 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வீதம், பதிவு செய்த அனைத்து பெண்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று சேலத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா சேலம் சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார். சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி, ராஜா, மனோன்மணி, சித்ரா, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உழைக்கும் பெண்கள் 550 பேருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

2016 சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தையும், ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் ஆகும். தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வீதம் பதிவு செய்த அனைத்து பெண்களுக்கும் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டு வேலைகளை கவனித்துவிட்டு வேலை செய்யும் நிறுவனங்களுக்கு விரைந்து செல்லவும், அதன் பிறகு மாலையில் அவர்கள் எளிதில் வீடுகளுக்கு திரும்பும் வகையிலும் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு ரூ.5 ஆயிரம் உயர்த்தி ரூ.25 ஆயிரம் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா விட்டுச்சென்ற அனைத்து பணிகளும் தொய்வின்றி நடக்கிறது.

கடுமையான வறட்சி நிலவினாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 246 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.3 ஆயிரத்து 100 கோடி பெற்று தந்துள்ளோம். இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக இவ்வளவு பெரிய தொகை கொடுத்தது கிடையாது.

மேட்டூர் அணை 84 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. அணையில் இருந்து விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணை மேலும் ஆழப்படுத்தி பருவமழை காலங்களில் 10 முதல் 15 டி.எம்.சி. தண்ணீரை கூடுதலாக தேக்கி வைக்கமுடியும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தமிழகத்தில் பயிர்களின் விளைச்சல் அதிகமாக கிடைத்துள்ளது. இதற்கு வண்டல் மண் பயன்பாடு தான் காரணம். உணவு தானியங்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

மேலும், 2 ஆயிரம் ஏரி, குளங்களில் குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ள ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் தடுப்பணை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வளவு மேம்பாலங்கள் கட்டப்படுமா? என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தார்கள். ஆனால் தற்போது பாலங்கள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சேலம், மதுரை, கோவையில் நவீன வசதியுடன் பஸ் போர்ட் அமைக்கப்படும். ஆட்டையாம்பட்டியில் இருந்து ஓமலூர் வரை புறவழிச்சாலை, திருச்செங்கோடு-சங்ககிரி-ஓமலூர் வரை 4 வழிச்சாலை, நாமக்கல்-திருச்சி இடையே 4 வழிச்சாலை, பவானி-மேட்டூர்-தொப்பூர் வரையில் 4 வழிச்சாலை அமைக்கப்படும். சேலத்தில் இருந்து சென்னைக்கு பசுமை வழித்தடத்துடன் ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இதன்மூலம் 60 கிலோ மீட்டர் தூரம் குறைவதுடன் 3¼ மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லமுடியும். இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மக்களின் பயன்பாட்டுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த ஆட்சியில் எதையும் செய்யவில்லை? என்று எதிர்க்கட்சியினர் குறை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் அதை தான் கூறுகிறார்கள். சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தொழில் வளம் பெருகுவதற்காக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை ஜனவரி 2019-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் படித்த எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 2 ஆயிரத்து 866 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 51 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் சவுண்டப்பன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சண்முகம், சரவணன், யாதவமூர்த்தி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, அய்யம்பெருமாம்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் பி.பழனி உள்பட கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

Next Story