மாவட்ட செய்திகள்

ராகுல் காந்தியின் பெருந்தன்மை + "||" + Rahul Gandhi's generosity

ராகுல் காந்தியின் பெருந்தன்மை

ராகுல் காந்தியின் பெருந்தன்மை
உலக வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாக 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி பதிவானது. அன்றைய தினம் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரம்புதூரில் மனித வெடிகுண்டால் சிதறடிக்கப்பட்டார்.
தமிழ் ஈழ போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகள் முடிந்து அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுவிட்டது.

தமிழ் ஈழ பிரச்சினை, ராஜீவ் கொலை, கொலையாளிகளுக்கான தண்டனை போன்றவை அரசியலாக்கப்பட்டன. இன்றைக்கும் அரசியல் களத்தில் இந்த விவகாரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்டு.


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டப்போது வாலிபனாக இருந்த அவருடைய மகன் ராகுல் காந்தி இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உயர்ந்துவிட்டார். இத்தனை நாட்கள் தன்னுடைய தந்தையின் மரணம் பற்றி எதுவும் பேசாமல் இருந்த அவர், தற்போது ‘ராஜீவ் காந்தியை கொன்றவர்களை மன்னித்து விட்டோம்’ என்று உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

அதோடு மட்டுமின்றி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு, அவர் இறந்த கிடந்த காட்சியை தொலைக்காட்சியில் கண்டு மிகுந்த வேதனைப்பட்டதாகவும், இதுபோன்ற மரணங்களுக்கு பின்பு சம்பந்தப்பட்டவரின் குடும்பம், பிள்ளைகள் படும் மிகுந்த வேதனைகளை தான் கடந்து வந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இவற்றையெல்லாம் சிங்கப்பூரில் இந்திய கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலாக சொன்னார்.

ராகுல் காந்தியின் இந்த உருக்கமான பேச்சுக்கு அரசியல் களத்தில் வரவேற்பும் கிடைத்துள்ளது. அதே போன்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இதை ஏமாற்று வேலை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி என்றும் விமர்சித்து ராகுல் காந்தியை சாடி இருக்கின்றன.

அதே வேளையில் தி.மு.க. ராகுல் காந்தியின் பேச்சை வரவேற்று இருக்கிறது. அவரின் உருக்கமான பேச்சு நெகிழ்ச்சி அளிப்பதாகவும், அவருடைய மனிதநேயத்தை காட்டுவதாகவும் இருப்பதாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்து உள்ளார். ராகுல் காந்தி உலகத் தமிழர்களின் இதயத்தில் குடியேறிவிட்டதாக தமிமுன் அன்சாரி புகழாரம் சூட்டி உள்ளார்.

ராகுல் காந்தி உணர்வுப்பூர்வமாக பேசிய வார்த்தைகள் அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. அவரின் வார்த்தைகள் அரசியலாக்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், ராஜீவ் காந்தியை கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருப்பது குறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் துப்புதுலக்கிய சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயன் கூறியதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கை துப்புதுலக்கி சட்டப்படி என் கடமையை செய்தேன். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக டெல்லி அதிகாரிகள் விசாரிக்க மறுத்துவிட்டநிலையில் என்னை விசாரணை நடத்துமாறு பணித்தனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி துப்பு துலக்கியதோடு, கொலையாளிகளை கைது செய்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெறுபவர்களுக்கும், எனக்கும் எந்த தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளும் கிடையாது. சட்டப்படி என்னுடைய கடமையை நான் செய்தேன். தன்னுடைய தந்தை கொலை வழக்கில் தண்டனை பெற்றுவருபவர்களை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறி இருப்பது அவருடைய பெரிய மனதை, பெருந்தன்மையை காட்டுகிறது. இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் பூஜை
டெல்லியில் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் பூஜை செய்து வருகின்றனர்.
2. இந்துத்துவா பற்றிய அறிவு; ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி
இந்துத்துவா பற்றி ரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு கூட முழுமையான அறிவு இருந்ததில்லை என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
3. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் மோடி தோல்வி அடைந்து விட்டார் : ராகுல் காந்தி
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் மோடி தோல்வி அடைந்து விட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
4. சர்ச்சை அதிகரித்த நிலையில் ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் - சித்து
பாகிஸ்தான் பயணம் தொடர்பாக சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில் ராகுல் காந்திதான் என்னை அனுப்பினார் என்று சித்து கூறியுள்ளது மேலும் சர்ச்சை அதிகரிக்க செய்துள்ளது.
5. நேர்மையான பிரதமராக இருப்பேன் என்ற வாக்குறுதியையும் மோடி உடைத்துவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு
நேர்மையான பிரதமராக இருப்பேன் என்ற வாக்குறுதியையும் பிரதமர் மோடி உடைத்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கிப் பேசியுள்ளார்.