1½ வயது குழந்தையை கொன்று, தாய் தற்கொலை


1½ வயது குழந்தையை கொன்று, தாய் தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2018 4:45 AM IST (Updated: 13 March 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

கொட்டிவாக்கத்தில் குடும்ப தகராறில், இளம்பெண் தனது 1½ வயது குழந்தையை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 30). வேன் டிரைவர். இவருடைய மனைவி சுமித்ரா (24). இவர்களுக்கு 1½ வயதில் கிருஷ்வா என்ற மகன் இருந்தான். கடந்த சில தினங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, குழந்தை கிருஷ்வா ஏதோ சாப்பிட கேட்டு அடம் பிடித்ததாக தெரிகிறது. எனவே கணபதி, சுமித்ராவிடம் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும்படி கூறினார்.

அதற்கு, குழந்தை ஏற்கனவே சாப்பிட்டு விட்டதாக சுமித்ரா பதில் அளித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தூங்க சென்று விட்டனர்.

இதையடுத்து, நேற்று காலை வழக்கம் போல் சுமித்ரா, டீ போட்டு கணபதிக்கு கொடுத்தார். ஆனால் இரவு நடந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு டீ வேண்டாம் என கூறிவிட்டு கணபதி வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த சுமித்ரா, தனது 1½ வயது குழந்தையின் கழுத்தை சேலையால் இறுக்கிக் கொலை செய்தார். பின்னர் அதே சேலையின் மறுமுனையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவான்மியூர் உதவி கமிஷனர் சுப்புராயன், தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கணபதிக்கும், சுமித்ராவுக்கும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story