கூடலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ஆறுகள் வறண்டன


கூடலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ஆறுகள் வறண்டன
x
தினத்தந்தி 14 March 2018 3:15 AM IST (Updated: 14 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீர்நிலைகள் வறண்டு விட்டது. தோட்ட தொழிலாளர்கள் தலையில் குடையை பொருத்தியபடி பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கூடலூர்,

மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக நீலகிரி உள்ளது. இதில் கூடலூர் பகுதியில் ஆண்டுக்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை பெய்கிறது. இதனால் கிராம்பு, ஏலக்காய், குறுமிளகு, இஞ்சி, காபி உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது. பெரும்பான்மையாக பச்சை தேயிலை விளைகிறது. கூடலூர் ஓவேலி, பாண்டியாறு, மாயார், பொன்னானி உள்பட பல ஆறுகள் ஓடுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் விவசாயம் நடை பெறுகின்ற பகுதியாக விளங்குகிறது.

வனங்களின் பரப்பளவு குறைதல், புவி வெப்பமயமாதல், காலநிலையில் மாற்றம் என பல்வேறு காரணங்களால் கூடலூர் பகுதியில் மழையின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 3 ஆயிரம் மி.மீட்டர் மழை பதிவாகி வருகிறது. ஆனால் தற்போது பாதியாக மழை அளவு குறைந்து விட்டது. இதனால் தென்னகத்தின் நீர் தொட்டி, ஆக்சிஜன் வங்கி என அழைக்கப்படும் கூடலூர் பகுதி சிறிது சிறிதாக அதன் பெருமையை இழந்து வருகிறது.

ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை பனி மற்றும் கோடை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி காணப்பட்டாலும் அடிக்கடி கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து குளுகுளு காலநிலை கூடலூர் பகுதியில் நிலவுவது வழக்கம்.

ஆனால் நடப்பு ஆண்டில் கோடை மழை சரிவர பெய்ய வில்லை. கடந்த மாத தொடக்கத்தில் முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பசுமை திரும்பும் என எதிர்பார்த்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி வருவதால் புல்வெளிகள் காய்ந்து காணப்படுகிறது. கூடலூர் பகுதியில் வறட்சி தொடருவதால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. மேலும் தேயிலை தோட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போதிய அளவு ஈரத்தன்மை இல்லாததால் பச்சை தேயிலையின் விளைச்சல் குறைந்து வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி சிறு தேயிலை விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, எருமாடு என முக்கிய நகர பகுதிகளில் மரங்களுக்கு பதிலாக கட்டிடங்கள் அதிகளவு உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங் களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் தலையில் துணி அல்லது சிறு குடைகளை பொருத்தி கொண்டு பணியாற்றும் நிலையை காண முடிகிறது. இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

ஆண்டுக்கு 6 மாதங்கள் மழை பெய்யும் காலத்தில் கடுங்குளிரில் அட்டை பூச்சிகள் மற்றும் விஷ பூச்சிகளின் தாக்குதலை சமாளித்து கொண்டு பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டோம். இப்போது கோடை காலம் நிலவுவதால் வெயிலை சமாளிக்க முடிய வில்லை. பருவமழை மட்டுமின்றி கோடை மழையும் இதுவரை பெய்ய வில்லை. இதனால் தேயிலை தோட்டங்களிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான தோட்டங்களில் விளைச்சல் இல்லாததால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். மழை இல்லாததால் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர். 

Related Tags :
Next Story