திறமையற்ற அரசால் திட்டங்கள் முடங்கிப் போய் உள்ளன, பாரதீய ஜனதா குற்றச்சாட்டு


திறமையற்ற அரசால் திட்டங்கள் முடங்கிப் போய் உள்ளன, பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

திறமையற்ற அரசால் திட்டங்கள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன என்று பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு அனைத்து கூட்டுறவு, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும். பல மாதங்கள் சம்பளம் வழங்காததால் அவர்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. கல்வி கட்டணத்தையும் அவர்களால் செலுத்த முடியவில்லை. இதனை கருத்தில்கொண்டும் பட்ஜெட் திட்டமிட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மீண்டும் லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு அனைவருக்கும் சம்பளம் வழங்கவில்லை என்றால் பாரதீய ஜனதா சார்பில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

கடந்த 15 ஆண்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் முறைகேட்டால் கூட்டுறவு வங்கி நஷ்டத்தை சந்தித்து உள்ளது. ஒட்டுமொத்த சீர்கேட்டிற்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொறுப்பேற்க வேண்டும். தற்போது உள்ள வாரிய தலைவர்கள் அரசு பணத்தை விரயம் செய்து வருகிறார்கள். இரட்டை பதவி பற்றி பா.ஜ. க. சார்பில் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

மத்திய அரசின் பல்வேறு நிதியை ஆளும் அரசு பயன்படுத்த தவறிவிட்டது. மேலும் மத்திய அரசின் பல வளர்ச்சி திட்டத்துக்கு மாநில அரசு தடையாக உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு செலவில் வாரந்தோறும் விமான பயணம் சென்று வருகிறார். அவர் எதற்காக செல்கிறார்? அவரின் சொந்த வேலையா? இல்லை புதிய திட்டத்தை கொண்டு வந்து உள்ளாரா? மக்கள் பிரச்சினைக்காக அவர் டெல்லி செல்கிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.

மக்களின் பிரச்சினையை திசை திருப்பவே வாரந்தோறும் டெல்லியில் தஞ்சம் அடைகிறார். கூட்டுறவு, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் அனைத்தும் முடங்கிப்போய் உள்ளன. மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.350 கோடி வழங்கி உள்ளது. இதில் 60 சதவீதத்தை மட்டுமே செலவு செய்துவிட்டு மீதம் ரூ.150 கோடியை திருப்பி அனுப்பி உள்ளனர்.

ஏரி, குளம் சீரமைக்க பல கோடி மத்திய அரசு கொடுத்தும், ஊழலால் இத்திட்டங்கள் முடங்கிப்போய் உள்ளன. சட்டமன்றத்தில் அறிவித்த எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. திறமை, அனுபவம் இல்லாத காங்கிரஸ் அரசை எதிர்த்து பொதுமக்கள், ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story