குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியான பெண் என்ஜினீயர் உடல் தகனம் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி


குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியான பெண் என்ஜினீயர் உடல் தகனம் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியான கும்பகோணம் பெண் என்ஜினீயரின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம்,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-சாந்தி தம்பதியரின் ஒரே மகள் அகிலாவும் (வயது 24) ஒருவர்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த அகிலா, மலையேறும் பயிற்சிக்காக குரங்கணிக்கு சென்றபோது காட்டுத்தீயில் சிக்கி பலியாகி உள்ளார்.

இவருடைய உடல் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அவரது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.

கும்பகோணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோழபுரம் அறிவழகன், தி.மு.க. நகர செயலாளர் தமிழழகன், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி, பா.ம.க. நிர்வாகி பாலகுரு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தமிழினி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஸ்டார் மனித நேய நிறுவனர் மார்டின் உள்பட பல்வேறு தன்னார்வ அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், அகிலாவுடன் பணிபுரிந்த ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் அகிலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து நேற்று காலை 10 மணி அளவில் அகிலாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கும்பகோணம் பெருமாண்டியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

அகிலாவின் வீட்டிற்கு நேற்று மாலை சென்ற அமைச்சர் துரைக்கண்ணு அகிலாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சருடன் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் உள்பட அ.தி.மு.க.வினர் சென்றனர். 

Next Story