அடுக்குமாடிகள் கட்ட எதிர்ப்பு: வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள் மீண்டும் போராட்டம்


அடுக்குமாடிகள் கட்ட எதிர்ப்பு: வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடிகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கரூர்,

கரூர் அருகே எஸ்.வெள்ளாளப்பட்டியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முன்பு பூங்கா மற்றும் பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக தகவல் பரவியது. மேலும் அதற்கான பூமி பூஜை பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பூமி பூஜை போடவிடாமல் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளும் திரும்பி சென்றனர். அதன்பின் நில அளவையர்களும் நிலத்தை அளக்க வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வப்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை பூமி பூஜையிட வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பூஜை நடத்த கூடாது, வேறு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமாறு கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பெண்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்திலும், ஆண்கள் மற்றொரு இடத்திலும் அமர்ந்திருந்தனர். அதிகாரிகளும் செய்வதறியாமல் நின்றனர். இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் உதவி கலெக்டர் சரவணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கலெக்டரும் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “வீட்டு வசதி வாரியம் வீடுகள் விற்கும் போது எங்களுக்கு பொதுப்பயன்பாட்டிற்கு என ஒதுக்கிய இடத்திலும், பூங்கா மற்றும் கடைகள் அமைய உள்ள இடத்திலும் தற்போது குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்ட முயற்சிக்கிறது. வேறு இடத்தில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த பகுதியில் சாலை, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனை நிறைவேற்ற வேண்டும்” என்றனர். இது தொடர்பாக ஒரு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என உதவி கலெக்டர் தெரிவித்தார். மேலும் இதில் பொதுமக்கள் சார்பிலும், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார். இதைதொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் கூறுகையில், “இந்த இடத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் கட்டப்படுவதில்லை. மாறாக நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கு 182 வீடுகள் 2 இடங்களில் பிரித்துக் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் 3 அடுக்குமாடிகளை கொண்டதாகும். துப்புரவு பணியாளர்களுக்கு தோரணகல்பட்டி நேரு நகரில் 632 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட உள்ளது” என்றார். எஸ்.வெள்ளாளப்பட்டியில் முதலில் துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடிகள் கட்டப்பட உள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென கரூர் அருகே உள்ள தோரணகல்பட்டியில் நேரு நகரில் இடம் ஒதுக்கி திடீர் மாற்றம் செய்துள்ளனர்.


Next Story