3 மாத சம்பள பாக்கியை வழங்கக்கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம


3 மாத சம்பள பாக்கியை வழங்கக்கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 3 மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உடுமலை, 

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான 6 மாத காலத்தை அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு கரும்பு பற்றாக்குறை காரணமாக ஆலையில் கரும்பு அரவை நடக்கவில்லை.

2018-ம் ஆண்டு கரும்பு அரவைக்காக சுமார் 300 ஏக்கர் மட்டுமே கரும்பு பதிவு (ஒப்பந்தம்) ஆனது. மழையில்லாததால் விவசாயிகள் கரும்பு பயிரிட முன்வரவில்லை. பதிவு ஆன கரும்பும் கடும் வறட்சியினால் காய்ந்துவிட்டது. அதனால் இந்த ஆண்டும் ஆலையில் கரும்பு அரவை நடைபெறாது.

இந்த ஆலையில் சுமார் 200 தொழிலாளர்களும், 40 ஊழியர்களும் உள்ளனர். ஆலையில் கரும்பு அரவை இல்லாத சமயங்களில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு லே-ஆப் விடப்படும். சில சமயங்களில் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் தொழிலாளர்கள் அயல்பணியாக அந்த ஆலைகளுக்கு அனுப்பப்படுவதும் வழக்கம். இந்த ஆண்டு அயல் பணியாக வேறு சர்க்கரை ஆலைக்கு தொழிலாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

135 தொழிலாளர்கள் லே-ஆப்பில் உள்ளனர். மீதி பேர் பணியில் உள்ளனர். லே-ஆப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் வழங்கப்பட வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்கள் மின்சாரம், ஒர்க்‌ஷாப் மற்றும் இந்த ஆலையின் சார்பு நிறுவனமான வடிப்பாலை (எரி சாராய ஆலை) ஆகிய இடங்களிலும் ஊழியர்கள் தலைமை அலுவலகம் மற்றும் கோட்ட கரும்பு அலுவலகங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆலையின் சார்பு நிறுவனமான வடிப்பாலையில் எரிசாராயத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை வங்கியில் பெற்ற கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்டு கொள்வதாக கூறப்படுகிறது.

அதனால் இந்த சர்க்கரை ஆலை நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த ஆலையில் பணியில் உள்ள மற்றும் லே-ஆப்பில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளத்தை வழங்கும்படி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆலை நிர்வாகத்திடம் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தொகையை வழங்கக்கோரி சர்க்கரை ஆலையின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சங்க செயலாளர் பி.மகாலிங்கம், தலைவர் டி.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மதியம் சர்க்கரை ஆலை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இன்று (புதன்கிழமை) காலை முதல் மாலை வரை அடையாள உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் 16-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம், ஆலை மற்றும் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story