கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு கதவு நிரந்தரமாக மூடலா?


கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு கதவு நிரந்தரமாக மூடலா?
x
தினத்தந்தி 14 March 2018 4:00 AM IST (Updated: 14 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் ஒரு கதவு நிரந்தரமாக மூடப்பட்டதாக கேள்வி எழுப்பி உள்ளது.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் 2 பாதையில் இரும்பு கம்பிகளான கதவுகள் (கேட்) உள்ளது. ஒன்றில் உள்ளே செல்லக்கூடிய பாதையும், மற்றொன்று வெளியே வரக்கூடிய பாதையாகும். இந்த 2 வழிகளும் கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்ட நாள் முதல் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் நெல்லையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கந்து வட்டியின் கொடுமையால் ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் கலெக்டர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டன. இதேபோல கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் வெளியே வரக்கூடிய வழியில் இரும்பு கம்பிகளான கதவு மூடப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பாதுகாப்பு கருதி இந்த கதவு மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மூடப்பட்ட கதவு மற்ற நாட்களில் திறக்கப்படவில்லை. தொடர்ந்து மூடியே உள்ளது. நிரந்தரமாக அந்த கதவு மூடப்பட்டு விட்டதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வாகனங்களில் வந்து செல்பவர்கள் நுழைவு வாயிலில் திறந்திருக்கும் கதவு வழியாக சென்று வருகின்றனர். நுழைவு வாயில் கதவில் ஒரே நேரத்தில் வாகனங்கள் உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் மோதக்கூடிய சூழ்நிலை உள்ளது. சற்று கவனமாக நின்று வாகனங்களை இயக்காவிட்டால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க மூடி கிடக்கும் கதவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அன்பழகனுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் போது மட்டும் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலில் ஒரு கதவை மூடியிருக்குமாறு கலெக்டருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை கலெக்டர் ஏற்பாரா? 

Next Story