குடிமங்கலம் பகுதியில் கொப்பரை தேங்காய் விலை சரிவு
குடிமங்கலம் பகுதியில் கொப்பரை தேங்காய் விலை சரிந்ததால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குடிமங்கலம்,
குடிமங்கலம், உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இதனால் தேங்காயில் இருந்து கொப்பரை உற்பத்தி செய்யப்படும் களங் கள் அதிகஅளவில் இயங்கி வருகின்றன.
குடிமங்கலம் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கொப்பரைகள் காங்கேயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்து வந்ததன் காரணமாக கொப்பரை களங்கள் அதிகரித்து வந்தன. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் குடிமங்கலம் பகுதிக்கு வந்து வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக குடிமங்கலம் பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. பருவ மழைகள் பொய்த்துவிட்டதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. குடிமங்கலம் பகுதியில் இருந்த 30 சதவீதம் தென்னை மரங்கள் கருகிவிட்டன. 35 சதவீதம் தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்துவிட்டன. ஆண்டுக்கு சராசரியாக 250 தேங்காய்கள் வரை காய்த்து வந்த நிலையில், தற்போது, 60 சதவீரம் வரை விளைச்சல் குறைந்துள்ளன.
100 தேங்காய்களில் இருந்து அதிகபட்சமாக 15 கிலோ வரை கொப்பரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது தேங்காய்கள் தரம் குறைந்ததாலும், சிறுத்தும் காணப்படுவதால் 100 தேங்காய்களில் இருந்து அதிகபட்சமாக 12 கிலோ வரை மட்டுமே கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக ஒரு கிலோ ரூ.135 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கொப்பரை தேங்காய் தற்போது விலை சரிந்து ஒரு கிலோ ரூ.127-க்கு விற்பனையாகிறது.
தேங்காய் விளைச்சல் குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ள நிலையில், கொப்பரை விலையும் உயரும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பல மாதங்களாக ஒரே சீராக இருந்த கொப்பரை விலை திடீரென சரிந்துள்ளதால் கொப்பரை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story