குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலி: கொல்லிமலையில் மலையேற்ற பயிற்சிக்கு மே 31-ந் தேதி வரை தடை


குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலி: கொல்லிமலையில் மலையேற்ற பயிற்சிக்கு மே 31-ந் தேதி வரை தடை
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலியாக கொல்லிமலை வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு மே மாதம் 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வன அலுவலர் காஞ்சனா தெரிவித்தார்.

நாமக்கல்,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி ஆனார்கள். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டும், கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் புல்வெளிகள் எளிதில் தீப்பற்ற கூடிய நிலையில் உள்ளதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கொல்லிமலை வனப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சிகள் மேற்கொள்ள வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை தடைவிதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் காஞ்சனா கூறியதாவது:- கொல்லிமலையில் கடந்த ஆண்டு 3 மலையேற்ற குழுக்கள் மட்டுமே அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்து இருந்தனர். அவர்களுக்கு வனத்துறை அலுவலர்கள் வழிகாட்டுதலுடன் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை யாரும் அனுமதி கேட்டு அணுகவில்லை. இருப்பினும் உயர் அதிகாரிகள் உத்தரவின்படி, வனத்தின் சூழலை கருத்தில்கொண்டு வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி வனக்கோட்டங்களை சேர்ந்த அலுவலர்கள் கொல்லிமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story