அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க குரல் கொடுத்து வருகிறது தொல்.திருமாவளவன் பேச்சு
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுத்து வருகிறது என்று தொல்.திருமாவளவன் பேசினார்.
குடியாத்தம்,
வேலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லையன், துணை செயலாளர் விவேக், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன், சமூகநல பேரவை மாவட்ட அமைப்பாளர் குருவிகணேசன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எஸ்.ராஜேஷ், தொகுதி செயலாளர்கள் மறைமலை, சுரேஷ்குமார், குடியாத்தம் நகர செயலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் வாசுதேவன் வரவேற்றார்.
மாநில அமைப்பு செயலாளர்கள் கோவேந்தன், சந்திரகுமார், வேலூர் பாராளுமன்ற செயலாளர் சிவசெல்லபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
கோவில்களில் பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் என சட்டத்தை இயக்க வலியுறுத்தி மகளிரை வைத்து மாநாடு நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். தமிழக அரசியலில் குழப்பமான சூழ்நிலை உள்ளது. இந்திய அரசியல் நெருக்கடியான நிலையில் உள்ளது.
தமிழகத்தில் பலர் முதல்-அமைச்சர் கனவில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவில் நடித்தால் முதல்-அமைச்சராகி விடலாம் என்ற எண்ணம் உள்ளது. இதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
ரஜினி, கமலுக்கு ரோல் மாடல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. எனக்கு ரோல்மாடல் அம்பேத்கர், பெரியார். அவர்கள் அறிவை விதைத்து சமூக புரட்சியை உருவாக்கினார்கள். எங்களது இறுதி இலக்கு ஆட்சி அதிகாரம்தான்.
அரசியலமைப்பு சட்டம்தான் நாட்டை பாதுகாத்து கொண்டிருக்கிறது. அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என அதற்கு எதிரான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுத்து வருகிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க முடியாது.
தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என பதிவிட்ட எச்.ராஜா, தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக கொந்தளித்தவுடன் பின்வாங்கி விட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அளவில் அரசியலை பார்க்கவில்லை, இந்திய அளவில் அரசியலை பார்க்கிறோம். மீண்டும் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story