வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பள்ளி காவலாளி பலி
வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பள்ளி காவலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனப்பாக்கம்,
காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது 45), வாலாஜா அருகே கடப்பேரியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மாதவன் வழக்கம்போல் பள்ளிக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு வரும் வாகனங்களை உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி பார்சல் பொருட்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி வந்தது.
இவர் சாலையை கடக்க முயன்றதை பார்த்த கன்டெய்னர் லாரியின் டிரைவர் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திருப்பினார். அப்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது கன்டெய்னர் லாரி மோதி திடீரென கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கிய மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவேரிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் மாதவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ராணிப்பேட்டையில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கன்டெய்னர் லாரி சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story