அரக்கோணத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
அரக்கோணம் ரெயில்வே பொறியியல் பணிமனையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரெஸ்தா ஆய்வு செய்தார்.
அரக்கோணம்,
அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் உள்ள ரெயில்வே பொறியியல் பணிமனை, பிளாஸ்பட் வெல்டிங் ஷாப் ஆகிய பகுதிகளுக்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரெஸ்தா நேற்று சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர், அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பிளாஸ்பட் பொறியியல் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதிகளை பார்வையிட்டார். ரெயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக செயல்பட்ட சார்பு உதவி ஆய்வாளர் துரைப்பாண்டியனுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
ஆய்வின் போது சென்னை கோட்ட மேலாளர் நவீன்குலாதி, பொறியாளர்கள், அலுவலர்கள், அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை மண்டல துணை ஆணையர் சாய்பிரசாத், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார்ரஜாக் உள்பட பலர் உடனிருந்தனர்.
பொது மேலாளர் குல்ஸ்ரெஸ்தாவிடம், அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனாமாசிலாமணி, பொதுச்செயலாளர் ஜெ.கே.ரகுநாதன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடந்து வரும் 1,2-வது பிளாட்பார நீட்டிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் வரை உள்ள ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரெயில் சென்னைக்கு இயக்க வேண்டும். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை 12 பெட்டிகள் கொண்ட ரெயில்களாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story