ஓமலூர் அருகே நீர்நிலையில் கட்டப்பட்டிருந்த வீடுகள், செங்கல் சூளைகள் இடித்து அகற்றம்


ஓமலூர் அருகே நீர்நிலையில் கட்டப்பட்டிருந்த வீடுகள், செங்கல் சூளைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 14 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே நீர் நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், செங்கல் சூளைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மூங்கிலேரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடுகள் மற்றும் செங்கல் சூளைகளை அகற்றவேண்டும் என அதே பகுதியை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் மூங்கிலேரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்த 15 குடும்பத்தினருக்கு பெரமச்சூர் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு அளவீடு செய்து வருவாய்த்துறை சார்பில் கல் நடப்பட்டது. ஆனால் அந்த அளவீடு செய்து போடப்பட்ட கல் மற்றும் குடிசைகளை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக அகற்றி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மூங்கிலேரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். ஓமலூர் தாசில்தார் சித்ரா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திருவரங்கன், வருவாய் ஆய்வாளர் லலிதாஞ்சலி மற்றும் போலீசார் அங்கு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், அங்கு வசித்து வரும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

எங்களுக்கு கொடுத்த மாற்று இடத்தில் அமைக்கப்பட்ட குடிசை மற்றும் அளவீடு செய்து நடப்பட்ட கல் ஆகியவற்றை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக அகற்றி உள்ளனர். இதனால் எங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. எனவே இதே பகுதியில் தான் இருப்போம். இல்லையேல் பாதுகாப்பான மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதற்கிடையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 2 செங்கல் சூளைகள் மற்றும் 2 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், மாற்று இடத்திற்கு பொருட்களை எடுத்து செல்ல வாகன வசதி செய்து கொடுப்பதாகவும், மேலும் அந்த இடத்தில் குடிசை அமைத்து குடியேறும் வரை உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒருநாள் கால அவகாசம் கொடுக்கும்படியும் தாங்களே அகற்றி கொள்வதாகவும் தெரிவித்தனர். உடனே வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஒருநாள் கால அவகாசம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story