சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு


சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் புழுக்கள் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து 22-வது வார்டு மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் நாங்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். விலை கொடுத்து வாங்க முடியாத சிலர், வேறு வழியின்றி நகராட்சி குடிநீரை குடித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உடல் நலகோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆகவே அதிகாரிகள் ஓரிரு நாட்களில் சுகாதாரமான குடிநீர் வழங்காவிட்டால், நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story