ஆண்டாள் கோவிலும், அரசியலும்


ஆண்டாள் கோவிலும், அரசியலும்
x
தினத்தந்தி 14 March 2018 10:45 AM IST (Updated: 14 March 2018 10:27 AM IST)
t-max-icont-min-icon

தாயார் ஆண்டாளுக்கும், தமிழக அரசியலுக்கும் என்றைக்குமே தொடர்புகளும், சர்ச்சைகளும் இருந்து வந்திருக்கின்றன.

சமீபத்தில் ஊடகங்களில் அதிகமாக ‘உலா’ வந்த பெயர் ஆண்டாள். நாச்சியார் என்று போற்றப்படுகின்ற இந்த பெண் ஆழ்வாரின் திருக்கோவில் கோபுரம் உலக பிரசித்தி பெற்றது.

தமிழகத்தின் அடையாளங்களாக உலகெங்கும் அறியப்பட்டவை கோபுரங்களே. ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாள சின்னங்களாக அவை அறியப்பட்டவை அல்ல. தமிழகப் பண்பாட்டினை, தமிழர்களின் உயர்வினை உயர்த்தி, காலங் கடந்து எடுத்து செல்வதற்கும், எடுத்து சொல்வதற்கும், நெடிது உயர்ந்து நிற்கும் நெறிகளுக்காகவும் படைக்கப்பட்டவை.

தற்போதைய தமிழக அரசின் சின்னம் ஆண்டாளின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது என்பதும், உயர்ந்த நிலையில் அது தமிழகத்தின் பெருமையை கூறுகிறது என்பதும் உண்மை.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா, கர்நாடகம் ஆகியவற்றின் பகுதிகளைக் கொண்டதாக சென்னை மாகாணம் திகழ்ந்தது. சென்னை மாகாண முதல்-அமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது இந்த சின்னத்தை பற்றி முன்மொழிவு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அது தமிழகத்தின் அரசு இலச்சினையாக 1949-ம் ஆண்டு அன்றைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசின் இந்த இலச்சினையை மாற்ற வேண்டும் என்றும், இது ‘இந்து’ மதத்தினை அடையாளப்படுத்துகிறது என்றும் அண்மைக் காலத்தில் ஒரு சாரார் சர்ச்சையை கிளப்பி, பிறகு எழுந்த வேகத்திலேயே அது ஓய்ந்தும் போனது.

இந்த சர்ச்சை அப்படி ஒன்றும் புதியது அல்ல. 1948-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டப் பேரவையில் எழுந்த ‘பழைய சமாச்சாரம்’ தான் இது என்பதை இன்றைக்கு பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

15-7-1948 அன்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினர் பி.கே.மொய்தீன்குட்டி இந்த தமிழக அரசின் இலச்சினை குறித்த சர்ச்சையை கிளப்பினார். இதற்கு விடையளித்தவர் அன்றைய அவை முன்னவரும், நிதி அமைச்சருமான கோபால்ரெட்டி. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்-அமைச்சராக வீற்றிருந்தார்.

“சென்னை மாகாணத்தின் அரசு இலச்சினையாக உத்தேசம் செய்யப்பட்டுள்ள இலச்சினை தென்னிந்திய கலாசாரத்தை (திராவிட) எடுத்து இயம்பும் கோபுரத்தை தாங்கியதாகவும், இந்திய பேரரசின் சிங்க முக இலச்சினையையும் உள்ளடக்கியதாக இருக்கும்” என்று நிதி அமைச்சர் கோபால்ரெட்டி அன்றைக்குப் பதில் அளித்தார்.

இந்த பதிலில் திருப்தியுறா உறுப்பினர் மொய்தீன்குட்டி, “பல்வேறு இனங்களை கொண்ட இந்த மாகாணத்தில் மதச் சார்பற்ற இந்த அரசின் இலச்சினையில் கோபுரம் எப்படி இடம் பெறலாம்?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, ‘இது போன்ற இலச்சினை மூலமாக இந்த அரசு மதச்சார்பற்ற தன்மையை இழந்துவிடாது. தொடர்ந்து மதச்சார்பற்ற அரசாகத்தான் செயல்படும். தென்னிந்திய பண்பாட்டை எடுத்து இயம்புவதற்கு இதைத் தவிர வேறு எதையும் நினைக்க முடியவில்லை’ என்று அரசின் நிலையைத் தெளிவாக நிதி அமைச்சர் கோபால் ரெட்டி விளக்கியுள்ளார்.

25-8-1998 அன்று சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் முன்னிலையில் நடந்த ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி, “இன்றைய தமிழக அரசின் சின்னமாக விளங்கும் கோபுரம் உள்ளடக்கிய சின்னத்தை வடிவமைத்தவர் பெரியவர் ஓமந்தூராரே. இந்த சின்னத்தின் மதச்சார்பற்ற தன்மை குறித்து அன்றைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு விளக்கம் கேட்டபோது ‘திராவிட கலாசாரத்தின் சின்னம் இது’ என்று எதிர்த்து வாதிட்டு வென்றவர் ஓமந்தூரார்” என்று புகழ்ந்து பாராட்டினார்.

திராவிடக் கலாசாரத்தின் மேன்மை, தமிழரின் கலை நுணுக்கம், தமிழரின் கட்டிடக்கலை வல்லமை, தமிழரின் நெடிது உயர்ந்த வான் நோக்கு என எல்லாவற்றையும் ஒரு சேர பறை சாற்றும் ஆண்டாளின் கோபுரம் நினைந்து, நினைந்து வணங்கத் தக்கது. ‘தமிழை ஆண்டாள்’ எப்போதும் தமிழகத்தை ஆளுகிறாள் என்பதுதானே உண்மை!

- இ.எஸ்.எஸ்.ராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

Next Story