திருவண்ணாமலையில் கவர்னர் வருவதை முன்னிட்டு அவசர கோலத்தில் தூய்மைப்பணி
கவர்னர் வருவதை முன்னிட்டு திருவண்ணாமலையில் அவசர கோலத்தில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். ஆய்வின்போது அவர் ‘தூய்மை இந்தியா திட்டம்’ குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட தலைநகரங்களுக்கு சென்ற அவர் 2 நாள் பயணமாக இன்று திருவண்ணாமலைக்கு வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து குறைகளையும் பெறுகிறார்.
கவர்னர் வருகையையொட்டி திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதை, சுற்றுலா மாளிகை, அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக இருக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பல மாதங்களாக போடப்படாத சாலைகள் சீரமைக்கப்படுகிறது. பெரும்பாக்கம் சாலை, கிரிவலப்பாதை உள்பட பல்வேறு சாலைகளும் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் சாலையில் காணப்படும் பள்ளங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பல சாலைகள் பஞ்சர் ஒட்டியது போன்று காணப்படுகிறது.
கிரிவலப்பாதை வழியாக கவர்னர் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கும் அதிவேகத்தில் தூய்மைப்பணிகள் நடக்கிறது. பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சாலையை மூடியவாறு காணப்படும் மணல் குவியல்கள் அப்புறப்படுத்தப்படுகிறது. முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், மற்றும் தனியார் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் கவர்னர் செல்லும் பாதையில் டிஜிட்டல் பேனர்கள், தள்ளுவண்டிகடைகள், வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல நாட்கள் அரசு அலுவலகத்துக்கு நடையாய் நடந்து புகார் மனு கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால் கவர்னர் வரும் 2 நாளுக்காக அதிகாரிகள் மின்னல் வேகத்தில் வேலை செய்வதை பார்த்த பொதுமக்கள் அது குறித்து அதிகாரிகளை விமர்சனம் செய்தனர்.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகே நடைபெறும் ‘தூய்மை இந்தியா’ திட்டப்பணி நிகழ்ச்சியில் தனி நபர் கழிப்பறை திட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். எனவே அங்கு நேற்று முன்தினம் ‘ஹாலோ பிளாக்’ கற்கள் கொண்டு வரப்பட்டு அவசர, அவசரமாக வரிசையாக 4 வீடுகளில் ஒரே நாளில் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர வேகத்தை எல்லா நாட்களிலும் அரசு அதிகாரிகள் காட்டினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.
அவ்வப்போது அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டு ஊழியர்களை வேகப்படுத்தி வேலைவாங்கி வருகின்றனர்.
கிரிவலப்பாதையில் உள்ள சென்டர் மீடியன், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளுக்கு வர்ணம் பூசி வருகின்றனர். இதற்காக ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே நகரத்தில் காணப்பட்ட தற்காலிக தரைக்கடைகள், தள்ளுவண்டிகடைகள் அகற்றப்பட்டன.
வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிரிவலப்பாதையில் 150 மீட்டருக்கு ஒரு போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நகரின் சில இடங்களில் சிறு, சிறு, போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story