பட்டிவீரன்பட்டி அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
பட்டிவீரன்பட்டி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, சிங்காரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் நெல் சித்தையன்கோட்டையில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும், வியாபாரிகளிடமும் நெற்களை விவசாயிகள் விற்று வந்தனர். சித்தையன்கோட்டைக்கு நெல்லை கொண்டு செல்ல அதிக செலவாகின்ற காரணத்தினாலும், அப்பகுதி விவசாயிகள் வருகை அதிகரித்த காரணத்தினால் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இடைத்தரகர்களின் குறுக்கீடு இன்றி விவசாயிகளிடம் அரசே இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் சித்தரேவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் வினய் தொடங்கி வைத்தார். இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையுடன் சேர்த்து குவிண்டால் ரூ.1,660-க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. இந்த நெல் மூட்டைகள் மதுரை மற்றும் திருச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து குறைவான அளவில் நெல்லை தற்போது கொள்முதல் செய்கின்றனர். இதனால் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 3 நாட்களில் நேரிடையாக வரவு வைக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் 10 நாட்களாகியும் விவசாயிகளின் வங்கி கணக் கில் பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் விரைவாக கொள்முதல் செய்யவும், வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story