ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி சீறிப்பாய்ந்த 859 காளைகள் போட்டி போட்டு அடக்க முயன்ற 16 வீரர்கள் காயம்


ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி சீறிப்பாய்ந்த 859 காளைகள் போட்டி போட்டு அடக்க முயன்ற 16 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே களமாவூரில் நடந்த ஜல்லிக்கட்டில் களத்தில் இறங்கி 859 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை போட்டிபோட்டு அடக்க முயன்ற 16 வீரர்கள் காயமடைந்தனர்.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள அழகுநாச்சியம்மன்கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்காக கொண்டு வரப்பட்ட காளைகளை, கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர். ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 859 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 227 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்கின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

இதில் காளைகள் முட்டித்தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் பாலசுப்பிரமணியன், வேலுச்சாமி, டேவிட் உள்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் பாலசுப்பிரமணியனை காளை முட்டியதில் அவரது வயிறு கிழிந்தது. இதில் பாலசுப்பிரமணியன் உள்பட 5 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், செல்போன், ஏர்கூலர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story