கள்ளக்குறிச்சியில் சம்பவம் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த இளம்பெண், 10 மாத குழந்தையுடன் தீயில் கருகி சாவு


கள்ளக்குறிச்சியில் சம்பவம் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த இளம்பெண், 10 மாத குழந்தையுடன் தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் இளம்பெண், 10 மாத குழந்தையுடன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சரவணன் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவருக்கும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து மகள் கனகா(27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு கார்த்திகா(4) என்ற மகளும், சிவச்சந்திரன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சரவணன், அதே பகுதியில் உள்ள ஒரு ஆடிட்டரிடம் கணக்கு எழுதும் வேலை பார்த்து வருகிறார். அருகில் உள்ள வீட்டில் இவரது அண்ணன் ரவி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கனகாவும், குழந்தை சிவச்சந்திரனும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், சரவணனும், கார்த்தி காவும் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில், கனகா காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினார். மேலும் குழந்தை சிவச்சந்திரன், பயங்கர சத்தத்துடன் அழுதான்.

இந்த சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சரவணனின் அண்ணன் ரவி, அண்ணி புனிதா மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது சரவணன் லேசான தீக்காயத்துடன், காப்பாற்றுங்கள் என்று கூறியபடி கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

அப்போது வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் கனகா படுத்திருந்த அறையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதில் தீயில் சிக்கி கனகாவும், குழந்தை சிவச்சந்திரனும் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். மேலும் வீட்டில் இருந்த பாய், தலையணை, துணிமணிகள் அனைத்தும் எரிந்து கிடந்தது.

இதையடுத்து படுகாயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை சிவச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கனகாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீக்காயமடைந்த சரவணனுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கனகா படுத்திருந்த அறையில் தீப்பற்றியதால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் ஜன்னல், சுவர் முழுவதும் கரும்புகை படிந்திருப்பதால், யாரேனும் மர்ம நபர்கள், பெட்ரோல் ஊற்றி அவர்களை தீ வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே யாரேனும் அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சரவணன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் 10 மாத குழந்தை தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story