மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 94 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 94 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 15 March 2018 12:47 AM IST (Updated: 15 March 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 94 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் செல்வராஜ், தனி தாசில்தார் செல்வம், மண்டல துணை தாசில்தார்கள் கற்பகம், செந்தில்குமரன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 230 மனுக்களை பொது மக்கள் அளித்தனர். இதில் 94 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது அதிகாரிகள் மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து 94 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்துவதன் நோக்கமே அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றிய விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பது தான்.

குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பெண்கள் நன்கு பயன்படுத்தி கொண்டு பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் வேளாண்மை வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன், கிராம நிர்வாக அலுவலர்கள் மூர்த்தி, ஜெகன், வெற்றி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரி சுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர்கள் ராஜா, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story