மணல் குவாரிகளுக்கு அனுமதி தாமதம்: நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைவதில் சிக்கல்


மணல் குவாரிகளுக்கு அனுமதி தாமதம்: நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைவதில் சிக்கல்
x
தினத்தந்தி 15 March 2018 3:15 AM IST (Updated: 15 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை பணிக்காக மணல் குவாரிகளுக்கு அனுமதி தருவதில் மாவட்ட நிர்வாகம் தாமதம் செய்வதால், பணிகள் முடிவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை,

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சாலைப்பணிகள் முடிவடைந்த போதிலும், பாலப்பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.

நான்கு வழிச்சாலை பாலங்கள் அனைத்தும் சுமார் ஒரு கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. 9 இடங்களில் பாலம் கட்டப்படுகிறது. பாலங்கள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படுவதால், 10 மீட்டர் ஆழத்திற்கு கீழே உள்ள மணல்களை அகற்றிவிட்டு புதிதாக கிராவல் மணல் அமைத்து, அதன்மீது பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்போதுதான் பாலத்தின் தன்மை அதிகரிக்கும். நான்கு வழிச்சாலைக்கு தேவைப்படும் கிராவல் மண், பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் இருந்து 10 கி.மீ. சுற்றளவிற்கு குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க இயலும். மற்ற பகுதிகளில் மணல் குவாரி அமைக்க எளிதில் அனுமதி கிடைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதில் தாமதம் செய்து வருகிறது.

இதனால் இப்பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் மந்தகதியில் நடந்துவருவதுடன், குறித்த காலத்தில் பணிகள் முடிவடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப்போக்குவரத்து துறை பொறியாளர்கள் கூறுகையில், தமிழக அரசு குவாரி அமைப்பதில் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. சிவகங்கை மாவட்டத்தில் தான் இப்பிரச்சினை உள்ளது. குவாரிக்கு முறையாக விண்ணப்பித்து பணம் கட்டி அனுமதிக்கப்பட்ட அளவுதான் மணல் அள்ளப்படுகிறது. ஆனால் பல இடங்களில் குவாரியில் இருந்து மணல் அள்ளுவதில் அதிகாரிகள் அனுமதி அளிக்க தாமதம் செய்வதால், கடும் சிக்கல் ஏற்படுகிறது. அதனை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. மானாமதுரை பகுதியில் பணிகள் தொய்வடைந்து உள்ளது. மற்ற பகுதிகளில் பணிகள் விரைந்து நடக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பணிகள் தாமதம் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் விளக்கமளித்துள்ளோம் என்றனர். 

Next Story