மத்திய அரசுக்கு எதிராக 20 லட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லியில் முற்றுகை போராட்டம், அய்யாக்கண்ணு தகவல்


மத்திய அரசுக்கு எதிராக 20 லட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லியில் முற்றுகை போராட்டம், அய்யாக்கண்ணு தகவல்
x
தினத்தந்தி 15 March 2018 4:00 AM IST (Updated: 15 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு எதிராக 20 லட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்

ராமநாதபுரம்,

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதுதொடர்பான துண்டுபிரசுரங்களை வழங்கினர். இதன்பின்னர் ராமநாதபுரம் வந்த அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாய விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை, நதிகள் இணைப்பு நடைபெற வேண்டும். அதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் விரைவில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 20 லட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லியே ஸ்தம்பிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படும். மேலும், பிரதமர் வீட்டு முன்பு தூக்கில் தொங்கும் போராட்டத்தை நடத்துவோம். மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான். அண்ணா சொன்னதுபோல வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது. வாக்குறுதிகளை காப்பாற்றும் தகுதி மத்திய-மாநில அரசுகளுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து ராமேசுவரம், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளிலும் அவர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Next Story