திருமண உதவித்தொகை பெற இடைத்தரகர்களாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை
திருமண உதவித்தொகை பெற இடைத்தரகர்களாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஊராட்சிக்கு உள்பட்ட கணினி இ-சேவை மையத்தில் திருமணத்திற்கு முன்பே வருமான சான்று, கல்வித்தகுதி சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு திருமண தேதிக்கு முன்னர் வருமானச்சான்று, கல்வி தகுதி சான்று உள்ளிட்ட சான்றுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அதிகாரி மற்றும் ஊர்நல அதிகாரிகளை சந்தித்து தெளிவு பெறலாம்.
பொதுமக்கள் இடைத்தரகர்களை அணுகாமல் உரிய அதிகாரிகளை சந்தித்து விவரங்கள் பெற்று இ-சேவை மையம் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருமண உதவித்தொகை பெறுவதில் இடைத்தரகர்கள் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு யாரேனும் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story