மாட்டு வண்டிகள் துணையுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள் பறிமுதல்


மாட்டு வண்டிகள் துணையுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 March 2018 4:15 AM IST (Updated: 15 March 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு வண்டிகள் துணையுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகளை உதவி கலெக்டர் பிடித்து பறிமுதல் செய்தார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் அள்ள ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணலை அள்ளி அதனை லாரிகளில் ஏற்றி கடத்தப்படுவதாக கரூர் உதவி கலெக்டர் சரவணமூர்த்திக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக உதவி கலெக்டர் சரவணமூர்த்தி இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் வாகன சோதனையில் ஈடுபட்டார். திருக்காம்புலியூர், மண்மங்கலம், கோவை சாலை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் மணல் கடத்தி வந்த லாரிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தார். மொத்தம் 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் அனைத்தும் மணலுடன் கரூர் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கடத்தியதற்காக லாரியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 2 லாரிகளின் உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தி விட்டு லாரியை எடுத்து சென்றனர். மற்ற லாரிகள் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாட்டு வண்டிகள் துணையுடன் லாரிகளில் மணல் கடத்தல் சம்பவமும், அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட 11 லாரிகளில் ஒரு லாரியின் பதிவெண் போலியாக இருந்தது தெரியவந்தது. கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த மலையாளம் என்பவரது பெயரில் இருந்தது. லாரியின் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இது குறித்து தென்னிலை போலீஸ் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பதிவெண் லாரி குறித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story