பல்லடத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கும் பணி
பல்லடத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கும் பணியை மாவட்ட நீதிபதி அல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பல்லடம்,
பல்லடம் தாலுகாவில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. பல்லடத்தில் சார்பு நீதிமன்றம் இல்லாததால், இந்த பகுதி பொதுமக்கள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்துக்கு வர வேண்டியிருந்தது.
இதனால் பல்லடம் பகுதியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வக்கீல்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பல்லடத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைதொடர்ந்து சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக பல்லடம் வடுகபாளையம் ஹாஸ்டல் சாலையில் கோகுல்கார்டன் என்ற பகுதியில் வாடகைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது, அந்த இடத்தில் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதில் நீதிமன்ற அறை, நீதிபதி அறை மற்றும் அலுவலக அறை போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை திருப்பூர் மாவட்ட நீதிபதி அல்லி நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை கூறினார். இந்த ஆய்வின் போது, பல்லடம் நீதிபதிகள் கிருஷ்ணன், இந்துலதா, அரசு வக்கீல் பொன்னுசாமி, வக்கீல் சங்கத்தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் வக்கீல்கள் உடனிருந்தனர்.
பல்லடத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்தால், திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 வழக்குகள் இங்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்தில் நஷ்டஈடு தொடர்பான வழக்குகள் போன்றவற்றை பல்லடத்திலேயே நடத்திக்கொள்ளலாம் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story