மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன்-டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன்-டிரைவர் பலி
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன்-டிரைவர் பரிதாபமாக இறந்தனர். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் கவியரசன்(வயது 26). எலக்ட்ரீசியன். அதே பகுதி குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் வினோத்(27). டிரைவர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை கங்களாஞ்சேரியில் இருந்து மூங்கில்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கவியரசன் ஓட்டினார். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சொரக்குடி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது எதிரே மணல் ஏற்றி வந்த லாரியும், கவியரசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே கவியரசன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வினோத்தை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முன்னதாக விபத்து நடந்த இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் பொதுமக்கள் சாலையில் திரண்டு நின்றனர். இதனால் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். 

Next Story