பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது


பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தபோது வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெருமாநல்லூர்,

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). சமையல் காண்டிராக்டர். இவர் செங்கப்பள்ளியில் உள்ள ஒரு மில்லில் சம்பளம் பெற்றுச்செல்வதற்காக பெருமாநல்லூர் வழியாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாலை 4 மணி அளவில் வலசுப்பாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையின் பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாலத்தின் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த 2 மர்ம வாலிபர்கள் தங்கராஜை மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த ரூ.1000 ரொக்கம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடினர். தங்கராஜ் அவர்களை துரத்திச்சென்றபோது அவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தங்கராஜ் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெருமாநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபட்டவர் களை தேடி வந்தனர். இந்த நிலையில் பெருமாநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் திருப்பூர்- பல்லடம் சாலையில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் ஊத்தங்குடி உலகநேரியை சேர்ந்த ராஜா என்ற வெங்கடேஷ்குமார் (28) அதே பகுதியை சேர்ந்த வசந்த் (21) என்பதும் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. செங்கப்பள்ளியில் ஒரு ஓட்டலில் வேலை செய்த பழக்கத்தில் அங்குள்ளவர்களை சந்திக்க வந்ததாகவும் அப்போதுதான் தங்கராஜிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

இவர்கள் இருவர் மீதும் நல்லூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அந்த வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் வெங்கடேஷ்குமார், வசந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்த திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

Next Story