நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்வு


நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்வு
x
தினத்தந்தி 15 March 2018 2:30 AM IST (Updated: 15 March 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 30 அடி உயர்ந்தது.

விக்கிரமசிங்கபுரம்,

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 30 அடி உயர்ந்தது. புனரமைப்பு பணிகள் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை


நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பாபநாசம், செங்கோட்டை, கடையம், அம்பை பகுதிகளில் நேற்று முன்தினம் விடியவிடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 190 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் 28 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 32 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர்மட்டம் 30 அடி உயர்வு

சேர்வலாறு அணையில் ஏற்கனவே அணை புனரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் நடந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சேர்வலாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் 19.68 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்ந்து 49.54 அடியானது. அணையில் தண்ணீரை தேக்கி வைத்தால் அணையின் புனரமைப்பு பணிகள் எதுவும் செய்ய முடியாது என்பதால் சேர்வலாறு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வருவதால் முண்டந்துறை பாலம், கல்யாணதீர்த்த அருவி மற்றும் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கல்யாண தீர்த்த அருவிக்கரை மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் வனத்துறையினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டும் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.

கடனாநதி-ராமநதி அணை

கடனாநதி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 40.20 அடியாக இருந்தது. ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 55 அடியாக உள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 25 அடியாக இருந்தது. ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 35 அடியாக உள்ளது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 25.06 அடியாக இருந்தது. ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 38.06 அடியாக உள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 10.75 அடியாக இருந்தது. ஒரே நாளில் 12.50 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம் -190, ராமநதி-130, கடனாநதி-110, சேர்வலாறு-102, செங்கோட்டை-101, குண்டாறு-98, தென்காசி-89.3, மணிமுத்தாறு -67.6, அம்பை-66.9, ஆய்க்குடி-64, நாங்குநேரி-60, கருப்பாநதி-55, அடவிநயினார்-50, கொடிமுடியாறு-50, பாளையங்கோட்டை-45.2, நம்பியாறு-38, நெல்லை-31.3, சங்கரன்கோவில்-25, ராதாபுரம்-13, சிவகிரி-9.2

Next Story