நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை வயலில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்


நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை வயலில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 15 March 2018 3:00 AM IST (Updated: 15 March 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வயலில் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வயலில் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.

பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லமுடியாத அளவிற்கு வெயிலின் கொடுமை இருந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் காலையில் வெயில் அடித்தது. மதியம் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டது. மாலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. நெல்லை, பாளையங்கோட்டை, டவுன், சந்திப்பு, பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் மாலையில் லேசான மழை பெய்தது.

இரவு 10 மணிக்கு மேல் சற்று கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. இதனால் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம், கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மகாராஜநகர், மேலப்பாளையத்தில் உள்ள சிறுவர் பூங்காக்களிலும், நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், மேம்பாலம் இறக்கம் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மகாராஜநகரில் ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்தது.

மாவட்டத்தின் மேற்கு பகுதியான பாபநாசம், சேர்வலாறு, கடையம், அம்பை, தென்காசி, செங்கோட்டை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டியது. இதனால் வறண்டு கிடந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டது.

நெற்பயிர்கள் சேதம்

நெல்லை, பாளையங்கோட்டை, தருவை, கோபாலசமுத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் பெய்த மழையால் இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கீழே சாய்ந்து சேதம் அடைந்தன. நெல்லை சந்திப்பு கட்டுடையார்குடியிருப்பு, கொக்கிரகுளம் பகுதிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் பரப்பில் உள்ள நெற்பயிர்கள் கீழே சாய்ந்து சேதம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பெய்த இந்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அவதிப்படுகிறோம். கடந்த 2 ஆண்டுகளால் மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் மழை பெய்ததால் பயிர்கள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்’ என்று வேதனையுடன் கூறினர்.

Next Story