வில்லியனூரில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி ஊருக்குள் நுழைய தடை


வில்லியனூரில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி ஊருக்குள் நுழைய தடை
x
தினத்தந்தி 15 March 2018 3:45 AM IST (Updated: 15 March 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரவுடி ஊருக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி,

வில்லியனூரை அடுத்த பொறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜேக் என்ற ஜெகன்(வயது 28). பிரபல ரவுடியான இவருக்கு ஐஸ்வரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மீது வில்லியனூர், கிருமாம்பாக்கம், போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாடியது போன்ற படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த படம் கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமிற்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஜேக் என்ற ஜெகன் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலையன் ஆகியோர் புதுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

அதை ஏற்று ஜேக் என்ற ஜெகன் 2 வாரம் புதுவைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி, போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் ஆகியோரை சந்தித்து ஜேக் என்ற ஜெகனின் மனைவி ஐஸ்வர்யா கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், தனது கணவர் ஜேக் என்ற ஜெகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு தற்போது குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அவரை திட்டமிட்டு சிக்க வைக்க வேண்டுமென்றே பிறந்த நாள் கொண்டாடிய படங்களை வெளியிட்டுள்ளனர். அவர் திருந்தி வாழ்ந்து வருவதை கெடுக்கும் வகையில் சிலர் இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த படம் ஒரு ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். இவர் மீது பல்வேறு வழக்குள் இருப்பதாக அவதூறு பரப்புகின்றனர். எனவே இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story