குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு


குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை,

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீவிபத்தில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மதுரை கிரேஸ் கென்னட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் (வயது 29) நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது கணவர் விபின் இதே தீ விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது. இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, தஞ்சாவூரை சேர்ந்த சாய் வசுமதி, 55 சதவீத தீக்காயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன் தினம் மாலை திடீரென கென்னட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதேபோல 75 சதவீத தீக்காயத்துடன் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பார்கவி, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தீக்காய சிகிச்சைப்பிரிவு டாக்டர்கள் ஏஞ்சலின், சுதா ஜெயராமன் மற்றும் 2 முதுநிலை மருத்துவ மாணவிகள் ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் இருந்து மலையேறும் பயிற்சிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச்சென்ற ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும், சென்னை பாலவாக்கத்தில் உள்ள டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் ஜியாட் என்பவரை, குரங்கணி போலீசார் தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சென்னை வந்தனர்.

அவர்கள் பாலவாக்கம் வி.ஜி.பி. லே-அவுட்டில் செயல்பட்டு வந்த டிரெக்கிங் கிளப் அலுவலகத்தை சோதனை செய்ய சென்றனர். அப்போது அந்த அலுவலகம் கடந்த சில மாதங்களாகவே பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. பீட்டர் வான் ஜியாட் தலைமறைவாக உள்ளார். அவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் நீலாங்கரை போலீசாரிடம் இருந்த ஆவணங்களின் நகலை பெற்றுக்கொண்டனர்.

மேலும், பீட்டர் வான் ஜியாட், பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என்பதால், அவர் சொந்த நாட்டிற்கு தப்பி சென்றுவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார், அவரது பாஸ்போர்ட்டை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் பீட்டர் குறித்து தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்து பற்றி தேனி மாவட்ட வன அதிகாரி ராஜேந்திரனிடம் வனத்துறை உயர் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

Next Story